பாஜகவில் இருந்துதான் எனக்கு அழைப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.. காங்கிரஸிலிருந்து கழன்றுகொள்ள நக்மா ரெடி.?

By Asianet TamilFirst Published Jun 5, 2022, 9:19 AM IST
Highlights

பாஜகவில் இருந்துதான் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன என்று காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.

 நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 10 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நகமாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நக்மா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது கடந்த 2003-இல் மாநிலங்களவை எம்.பி, வாய்ப்பு தரப்படும் என்று சோனியா காந்தி உறுதி அளித்தார். கட்சியில் சேர்ந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், எனக்கு எந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக எனக்கு தகுதி இல்லையா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நக்மா தெரிவித்த கருத்துக்களால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகும் நக்மாவை தொடர்புகொண்டு காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நக்மா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாடு பற்றி நக்மா பேட்டி அளித்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியில் நான் சேர்ந்தபோது 9 மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்தேன். 2004-இல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பதவியை ஏற்றால் சினிமாவில் நடிப்பது பாதிக்கப்படும் என நினைத்து வேண்டாம் என சொல்லி விட்டேன். 

என்னுடைய உழைப்புக்கு கட்சியின் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறினேன். கட்சிக்காகக் கடுமையாக உழைத்தேன். தேர்தல் நடக்கும்போது எல்லா மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றிவிட்டேன். அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்காகப் போராட்டம் நடத்தி இருக்கிறேன். களத்தில் இறங்கி கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு இருக்கிறேன். இதற்கு மேல் கட்சிக்கு நான் என்ன செய்ய வேண்டும்? இந்தத் தகுதி எல்லாம் போதாதா? அதனால்தான் நான் என்னுடைய மனக்குமுறலை தெரிவித்தேன்.

என்னுடைய ஆதங்கத்தைப் பற்றி கட்சி மேலிடத்திலும் விளக்கமாகத் தெரிவித்து விட்டேன். என்னுடைய உழைப்பை பார்த்தும், எனக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பார்த்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்து எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. பாஜகவில் இருந்துதான் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், மற்ற கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை” என்று நக்மா தெரிவித்துள்ளார்.

click me!