நாங்கள் காக்கா கூட்டமா.? பாஜக தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அதிமுக வருந்தும்..கரு.நாகராஜன் பதிலடி

By Ajmal KhanFirst Published Jun 5, 2022, 8:14 AM IST
Highlights

தமிழகத்தில் யார் எதிர்கட்சியாக செயல்பட்டு வருவது  என்ற போட்டி அதிமுக- பாஜக இடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் யார் எதிர்கட்சி ?

திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில்,  திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். இதன் காரணமாக திமுக- பாஜக இடையே வார்த்தைப்போர் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜக தனது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என கூறினார்.   திராவிட கொள்கைகள் மற்றும்  தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், காவிரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் தேசிய கட்சி இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்தார்.  அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாஜகவின் அணுகுமுறையை சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் கேட்டுக்கொண்டார்.

அதிமுக- பாஜக கருத்து மோதல்

இதற்கு பதில் அளித்த பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி,  ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில் பொன்னையன் பாஜகவை குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது என கூறினார். பாஜகவை  விமர்சனம் செய்து பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் அக்கட்சி விளக்கம் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.  தமிழகத்தில் அதிமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை என தெரிவித்தவர், அதிமுக 67 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு எதிர்கட்சியாக சரியாக செயல்பட வில்லை, ஆனால் 4 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே  வைத்து கொண்டு பாஜக எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளையும் முன் வைக்கிறது  என கூறினார். இதே போல எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வலுவாக செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். இதன் காரணமாக அதிமுக- பாஜக இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவிக்கையில், பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். இரை போட்டால் கூட்டம் வரும். தீர்ந்தால் பறந்துவிடும்.  வி.பி.துரைசாமி எங்களை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம். திமுகவில் இருந்து பாஜகவிற்கு அவர் எதற்கு சென்றார் தெரியாதா என கேள்வி எழுப்பினார். அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என கூறியிருந்தார்.

பாஜக தனித்து போட்டி- அதிமுக வருந்தும்

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன்,  காக்காவை மட்டமாக பேசக்கூடாது. பல கட்சிக்கு போய் வந்துகொண்டிருக்கும் காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை.  காக்கா கூட்டத்தை பாருங்க, ஒண்ணா இருக்க கத்துங்கங்க... என்று பாட்டு உள்ளது. அதை செல்லூர் ராஜூ மறந்துவிட்டார். நாங்கள் விரட்டிவிட்டதும் ஓடும் காக்கா கூட்டம் அல்ல. பாஜக ஒற்றுமை கூட்டம். மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம். என தெரிவித்தார். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாக தெரிவித்தவர்,  தனித்து போட்டியிட பாஜகவுக்கு சக்தியில்லாமல் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 488 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார். சென்னை மாநகராட்சியில் 17 இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றதாகவும் குறிப்பிட்டார். பாஜகவை தனித்து போட்டியிட விட்டது தவறு என அதிமுக நிர்வாகிகளே வருத்தப்பட்டதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்.. அதிமுகவை துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி.. செல்லூர் ராஜூ

click me!