
கனிமொழி குறித்து மிகவும் கீழ்த்தரமாக டுவிட்டரில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் செயலைக் கண்டித்து சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளில் அவரின் போஸ்டரை ஓட்டி திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக-வின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் கீழ்த்தரமாக பதிவிட்டுள்ளார். அதில் பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், , "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என தெரிவித்திருந்தார்.
இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் ட்விட்டரில் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.
எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் திமுகவினர் நடத்தி வருகின்றனர். . ஆனால் இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் எச். ராஜா தேர்தல் பணிகளுக்காக கர்நாடகா சென்றுவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.
இந்நிலையில் சென்னையில் திமுகவினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி எச். ராஜாவின் போஸ்டரை 100க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகளில் ஒட்டப்பட்டு அவரது செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்ரமணியன், எச். ராஜா ஒரு மனிதக்கழிவு. அவர் குப்பையில் போட வேண்டியவர் தான். மேலும் எச். ராஜா பெரியார் சிலைகளை உடைப்போம் என்றார், அதனால் அவரை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளோம் என்றார் மா. சுப்ரமணியன்.
எச். ராஜா விவகாரத்தில் திமுக இப்படி இழிவு செய்வது சரியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், தரம் தாழ்ந்து எதுவும் செய்யவில்லை எச். ராஜாவை சேர வேண்டிய இடத்தில் சேர்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.