
தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற உதவியாக பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.
மருத்தவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததும் டாக்டர் கனவில் இருந்த அரியலூர் அனிதாவுக்கு அது எட்டாக்கனியாகிவிட்டது. இதனால் மனம் உடைந்த அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.பி.பிரகாஷ் அனிதாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு நிதியுதவியும் செய்தார்.
இந்நிலையில் மற்றுமொரு தங்கை அனிதாவின் உயிரை நாம் இழந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்களை ஒன்றிணைத்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து தமிழ்வழி, ஆங்கிலவழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application) உருவாகி வருகிறது. தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றை காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக்கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் இந்த mobile app பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஜீ.வி.பிரகாஷ். அதையெல்லாம்விட, சமூக பிரச்சனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர். ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்பட பல விஷயங்களில் நேரடியாகக் களமிறங்கிப் போராடியவர். அவர், தற்போது நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் இலவச மொபைல் ஆப் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.