
கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு வரை தான் செல்ல வேண்டும் என்றும் பத்மாவதி திரைப்படத்துக்கு நடிகர் கமலஹாசன் ஆதரவு தெரிவித்திருப்பது தற்குறியான செயல் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
பத்மாவதி இந்தி திரைப்படத்தில் வரலாறு திரித்துக் கூறப்பட்டிருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில அமைப்புகள் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகாவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தன.
இதற்கு நடிகர் கமலஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கடும் எண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பத்மாவதி படம் வெளியிடப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாள்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பத்மாவதி படத்தில் சரித்திரம் திரித்து கூறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பத்மாவதி திரைப்படத்திற்கு நடிகர் கமலஹாசன் ஆதரவு தெரிவித்திருப்பது தற்குறியான செயல் என்றும் கருத்து சுதந்திரம் என்று திரைப்படம், ஊடகங்களில் எதையும் திரித்து கூற முடியாது, அது அடுத்தவர் மூக்கு வரை தான் செல்ல வேண்டும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதே போல் ஜி.எஸ்.டி.,யால் மாநில உரிமை பறிக்கப்பட்டது என கூறுவது பொருளாதார தற்குறித்தனம் என்றும் அதில் மத்திய அரசு மட்டும் வரி வசூலிக்கவில்லை மாநில அரசும் தான் வசூலிக்கிறது என அவர் குறிப்பிட்டார்..
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் சசிகலா உறவினர்களிடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் மத்திய அரசுக்கும், பா.ஜ.,விற்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.
ஏற்கனவே நடந்த வருமானவரி சோதனையின் நடவடிக்கைகள் குறித்து கேட்கும் ஸ்டாலின், 13 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட 2ஜி குறித்து தற்போது தீர்ப்பு வரவுள்ளது. அந்த தீர்ப்பு விரைவாக வரவில்லை என, ஏன் கேள்வி கேட்கவில்லை. என்றும் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.