
தற்போது அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் இல்லை என்றும் பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பேன் எனவும் நடிகர் ரஜினி காந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த், சென்னையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்ததால் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசும்போது, போர் வரும்போது அதை எதிர்கொள்வோம் என்று பேசினார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 12 ஆம்தேதி அதாவது அவரது பிறந்த நாள் அன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே ரஜினி உயிர் நண்பரான கமல் அரசியலுக்கு வரமேட்டேன், எனக்கும் அதற்கும் சரிபட்டு வராது என கூறியவர் தற்போது அரசியல் களத்தில் குதிக்க ஆயத்தமாகி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை மந்திராலயத்துக்குச் சென்ற அவருக்கு மடத்தின் சார்பில் சால்வை அணிவித்து, ஸ்ரீராகவேந்திரரின் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இதையடுத்து ரஜினி இன்று சென்னை திரும்பினார். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தற்போது அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் இல்லை என்றும் பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் காலா படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஜனவரி 26 க்கு பின் 2.0 திரைப்படம் வெளியாகும் எனவும் குறிப்பிட்டார்.