
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்க இடம் தேடினர். ஆனால், எம்.ஜி.ஆர். சமாதி அருகிலேயே அதனை அமைத்துவிடலாம் என்று முடிவு செய்து, தமிழக அரசின் சார்பில் அவசர கதியில் எம்.ஜி.ஆர். சமாதி இருக்கும் இடத்திலேயே ஜெயலலிதாவுக்கும் சமாதி அமைக்கப்பட்டது.
அப்போது, ஜெயலலிதா சமாதி சதுர வடிவில், பளிங்குக் கற்களால் சாதாரண சமாதி போலவே அமைக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழக அரசியல் நிலவரம் தள்ளாடிக் கொண்டிருந்ததால், மறைந்த தங்கள் தலைவிக்கு சரியான வகையில் சமாதி அமைக்க உடனே முடியாமல் போனது அதிமுக., அரசுக்கு.
பின்னர் கட்டுமான ஆர்கிடெக்ட் நிறுவனங்களிடம் ஜெயலலிதா சமாதியை கலை நயத்துடன் புதிதாக அமைப்பதற்கும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெறுவதால், அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர். சமாதியை புனரமைத்து அழகாக்கவும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இரு மாதிரிகளை அந்த நிறுவனங்கள் உருவாக்கி அளித்துள்ளனவாம்.
ஜெயலலிதா சமாதி, தாமரை வடிவில் பீடத்துடன் ஒரு கோயிலைப் போலும், முகப்பில் தாமரை இதழ்கள் தரையில் விரிந்து பரந்த நிலையில் இருப்பது போலும் மாதிரிகளை அரசுக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கலைத் துறையில் இருந்து வந்து விருதுகள் பல பெற்று, சாதனை படைத்த நாயகி என்பதால், கலை நுணுக்கத்துடன் அவரது சமாதியை அமைக்க அரசு திட்டம் இட்டுள்ளது. அதன் அடிப்படையில், தாமரை மலர் போன்ற முகப்புடன் அவரது சமாதி மாதிரி வடிவத்தை அளித்துள்ளனர். இருப்பினும், பாஜக.,வின் சின்னமான தாமரையை அது பிரதிபலிப்பது போல் இருப்பதாக, ஒரு சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பக் கூடும்!