
டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அவரது மறைவுக்குப் பிறகு அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம்
போயஸ் தோட்ட இல்லத்துக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் சசிகலாவின் 5 அறைகள், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை என சல்லடை போட்டு சலித்தனர்,
இந்த நிலையில் இன்று திடீரென போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனை முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததையடுத்து போலீஸ் குவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், கலைராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் போயஸ் தோட்டத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு மாதாமாதம் செய்யக்கூடிய சடங்குகள் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வருமான வரி சோனை நடைபெற்று அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாரையும் உள்ளே விடமுடியாது என போலீசார் தெரிவித்தனர். திதி நடத்த புரோகிதர்களை மட்டுவது உள்ளே அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கேட்டதற்கு அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
அனைவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினமான டிசம்பர் 5 ஆம் தேதி மவுன ஊர்வலம் அனுசரிக்கப்பட உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலில் நிகரில்லாத தலைவராகவும், பன்னாட்டு தலைவர்கள் போற்றியவருமான ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் டிசம்பர் 5ம் தி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவின் பேரில் இந்த மவுன் அஞ்சலி ஊர்வலம் நடக்கும். மேலும் ஊர்வலத்தின் இறுதியில் ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து, உறுதி மொழி ஏற்கப்படும். டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.