
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்தார் என்றும் அவரது செயல் அவமானகரமானது அல்ல என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி இளைய பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல், அமர்ந்து இருந்து தமிழ்தாயை அவமதித்தார் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, விளக்கம் அளித்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்தார் என்றும் அதனால் அவரது செயலை குற்றம்சொல்ல முடியாது என தெரிவித்தார்.
அது ஒரு அவமானகரமான செயல் இல்லை என்றும், தமிழ்மொழி என்பது தெய்வம் போன்றது என்றும், அந்த தெய்வம் குறித்த பாடல் இசைக்கப்பட்டபோது, ஞானநிலையில் இருந்து, தனது மரியாதையை விஜயேந்திரர் தெரிவித்தார் என்றும் எச்.ராஜா குறிப்பிட்டார்.
பாஜக போன்ற இயக்கங்கள் தமிழுக்கு எதிரானது அல்ல என்றும் திராவிட இயக்கங்கள்தான் தமிழ் விரோதிகள் என்றும் எச்,ராஜா தெரிவித்துள்ளார்.