
ஆண்டாள் குறித்து பேசியதற்கு கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்திருந்தாலும், பாஜகவினர் இழிவாக பேசி வருவது சரியில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து கருத்தரங்ம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம், கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல என்றும், புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவினர், கவிஞர் வைரமுத்து குறித்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், வைரமுத்து குறித்து பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா இழிவாக பேசி வருவது சரியில்லை என்று கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தினந்தோறும் பெட்ரோல் விலையை ஏற்றி வருவதாக கூறினார்.
பாஜக அரசு விரைவில் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்றால் மத்திய அரசை எதிர்த்து மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா, வைரமுத்துவை இழிவாக பேசி வருவது சரியில்லை என்றும் கண்டனத்துக்குரியது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த கேள்விக்கு, போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.