
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு எல்லாம் முடிவு வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது தினகரனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சி என பொய் கூறும் ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவை புகழ்வது போன்று நடித்துவிட்டு, மத்திய பாஜக அரசிடம் கைகட்டி சேவகம் செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
சபையின் நாயகராக நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகர், அவ்வாறு செயல்படுகின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் உரையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட முயன்றேன். ஆனால், எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. நாளை முதல்வர் பழனிசாமிதான் பேசுவார். எனவே நான் பேசினால், இன்று மட்டுமே பேசமுடியும் என்ற சூழலில் எனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.
எனது தொகுதியான ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அங்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பேச திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் முடியாமல் போய்விட்டது என தினகரன் தெரிவித்தார்.
தினகரனின் ஆதரவாளர்கள், அதிமுகவிலிருந்து நீக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எங்களுக்கு இவ்வளவு பேரின் ஆதரவு இருக்கிறது என்பதை அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக கூறி ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இந்த பிரச்னைக்கு எல்லாம் முடிவுவரும் நேரம் நெருங்கிவிட்டது என தினகரன் தெரிவித்தார்.