எப்படி இருந்த கட்சி.. என் கண் முன்னால் அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? மனவேதனையில் துடிக்கும் கி. வீரமணி!

By Asianet TamilFirst Published Jun 26, 2022, 10:25 PM IST
Highlights

லேடியா, மோடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக அதிமுகவினர் திசைமாறி செல்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கும் நிலையில், இரட்டைத் தலைமையை அப்படியே தக்க வைக்க முடியுமா என்ற சகல உத்திகளையும் அரங்கேற்றி வருகிறார் ஓபிஎஸ். ஆனால், ஜூன் 23 அன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை திட்டமிட்டு அவமரியாதை செய்து, கூட்டத்திலிருந்து வெளியே போகும் அளவுக்கு இபிஎஸ் தரப்பு சம்பவங்களை நிறைவேற்றிக் காட்டியது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரித்துவிட்டது.

அடுத்ததாக, ஜூலை 11 அன்று மீண்டும் புதிய பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டவும் அந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உள்பட இதர தீர்மானங்களை நிறைவேற்றவும் தீயாய் வேலை செய்து வருகிறது இபிஎஸ் தரப்பு. அந்தப் பொதுக்குழு கூட்டத்தை எப்படியும் நடத்த விடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் காய்களை நகரத்தத் தொடங்கியிருக்கிறார். அதிமுகவில் நடைபெற்று வரும் இந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் பற்றி திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கனவே தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி அதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டை குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு மட்டுமா.? தமிழகத்துக்கும் இபிஎஸ்தான் தலைமையேற்க வேண்டும்.. பொளந்துகட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்!

திராவிட கழகத்தினர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மதுரைக்கு கி. வீரமணி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. முதலில் திராவிடர் கழகம்தான் அதிமுகவுக்கும் தாய் கழகம் என்பதை அதிமுகவினர் மறந்து விட்டார்கள். அதிமுகவின் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்து விட்டார்கள். தற்போதைய அதிமுக என்பது டெல்லியின் அடமான கட்சியாகத்தான் உள்ளது. லேடியா, மோடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக அக்கட்சியினர் திசைமாறி செல்கிறார்கள். 

இதையும் படிங்க: ஓபிஎஸ் அணிக்கு திரும்பும் நிர்வாகிகள்..? பொதுக்குழுவில் நடைபெற்ற பிரச்சனைக்கு யார் காரணம்- வைத்தியலிங்கம்

அதிமுகவை டெல்லியிலிருந்து யார் மீட்கிறார்களோ அவர்களே அக்கட்சி தலைமைக்கு வர வேண்டும்.  அதிமுகவின் பொதுக்குழுவில் புது குழுதான் உருவாகியிருக்கிறது.  அதிமுக என்கிற மிகப்பெரிய இயக்கத்துக்கு கண் முன்னாலேயே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போதே மனது வேதனையாக இருக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய  விடாமல் பாஜகதான் பிரித்தாளுகிறது.  தமிழகத்தில் எதிர்க்கட்சியை வைத்து பொம்மலாட்டப் போராட்டம் நடத்துகிறது.” என்று கி. வீரமணி தெரிவித்தார். 

இதையும் படிங்க: திமுகவிற்கு இலவச சட்ட ஆலோசனை தருபவர் கி.வீரமணி..! திராவிடர் கழகத்தை நக்கல் செய்த வி.பி.துரைசாமி

click me!