எத்தனை தடவை வெட்டுறது... ஒட்டுறது... உதயநிதியை கடுப்பாக்கிய கர்ணன்..!

By Thiraviaraj RMFirst Published Apr 15, 2021, 2:34 PM IST
Highlights

உதயநிதியும் கடும் அதிருப்திக்கு உள்ளானார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் நான் சொன்ன பிறகும், திருத்தம் சரிவர செய்யப்படவில்லை என்று மறைமுகமாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

 2019-ல் அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நில விவகாரம் பற்றிய விழிப்புணர்வை இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்று பாராட்டினார்.

அதுவே திமுகவுக்கு தலைவலியாய் மாறியது. பஞ்சமி நிலத்தில்தான் இன்றைய முரசொலி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதை திமுக மறுத்து விளக்கமும் அளித்தது. எனினும் இது தொடர்பான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்ற அசுரன் படம் எதிர்பார்த்தது போலவே, நடிகர் தனுசுக்கு மீண்டும் ஒருமுறை தேசிய விருதை பெற்று தந்தது. இதனால், அடித்தட்டில் உள்ள விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை கூறும் படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அப்படி அவர் நடித்து அண்மையில் வெளியாகியுள்ள படம் கர்ணன். மாரி செல்வராஜ் கர்ணனை இயக்கி இருக்கிறார். இவர், ஏற்கனவே பரியேறும் பெருமாள் படத்தை டைரக்ட் செய்தவர். அந்தப் படத்தில் எவ்வாறு சமூக பிரச்சினையை அவர் கையாண்டிருந்தாரோ, அதேபோல் இதிலும் ஒரு கனமான விஷயத்தை தொட்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் பேருந்து நிற்காமல் செல்வதை தட்டிக்கேட்கும் ஒரு இளைஞன் அதற்காக நடத்தும் போராட்டம்தான் படத்தின் கதை. இந்தக் கதை பொடியன்குளம் என்னும் கிராமத்தில் 1997க்கு முற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டது என்று படத்தின் டைட்டிலில் ஒரு குறிப்பும் வருகிறது. வருடம் பற்றிய இந்தக் குறிப்புதான், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்கள் ஒருபக்கம் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில் இப்போது வருடம் பற்றிய குறிப்பு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆண்டான 1997-ல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

தனது தாத்தா ஆட்சிக்காலத்தில், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கொதித்துப் போன திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, கர்ணன் படத்தின் இயக்குனர், மாரி செல்வராஜூக்கு உடனடியாக ஒரு வேண்டுகோளை வைத்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை 2 நாட்களில் சரிசெய்து விடுகிறோம் என உறுதியளித்தனர்!” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ், சம்பந்தப்பட்ட பகுதியில் சிறிய மாற்றத்தை செய்தார். அதன்படி கர்ணன் படத்தில் காட்டப்பட்ட பொடியன்குளம் நிகழ்வு, ‘1997-ன் முற்பகுதியில்’ என்பதில் இருந்து ‘1990களின் பிற்பகுதியில்’என மாற்றப்பட்டது. இந்தத் திருத்தமும் கூட திமுகவினரை கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஏனென்றால், 90-களின் பிற்பகுதியிலும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடந்தது. அதாவது 1989 ஜனவரி மாதம் முதல் 1991 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகள் அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. இதனால் திமுகவினர் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜை வசைமாரி பொழிந்து வருகின்றனர்.

உதயநிதியும் கடும் அதிருப்திக்கு உள்ளானார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் நான் சொன்ன பிறகும், திருத்தம் சரிவர செய்யப்படவில்லை என்று மறைமுகமாக குற்றம்சாட்டி இருக்கிறார். அவருடைய பதிவில், “படைப்பில் உள்ள பிழையை சுட்டிக் காட்டுகையில் அதை திருத்திக் கொள்வது, வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் 1990-களின் இறுதியில் என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது திரும்பவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அதை தணிப்பதுபோன்று உதயநிதி வெளியிட்ட மற்றொரு ட்விட்டில், “இனி இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

click me!