
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உத்தேசப் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், திமுக கூட்டணியின் உத்தேச தொகுதி பட்டியல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும். திமுக சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளில் மதிமுகவுக்கு 7, விசிக 7, இயூமுலீ கட்சிக்கு 3, மமக கட்சிக்கு 2, மஜகவுக்கு 2, எஸ்டிபிஐ கட்சிக்கு 2, கொமதேக கட்சிக்கு 2, தவாக 2, இதர கட்சிகளுக்கு 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தேச பட்டியல் கூறுகிறது.
மேலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளும் போட்டியிடும் என அதில் கூறப்பட்டுள்ளது.