அதிமுகவில் சுமார் 30 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு பிறகு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவும் பொதுச்செயலாளர்களும்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகளாக அதிமுக பிளவுப்பட்டது. முதலில் டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து இருந்த நிலையில் கடந்தாண்டு முதல் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் கடந்த 8 மாதங்களாக தொடர் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர்கள் யார்.? யார்.?
இந்த தீர்ப்பால் உற்சாகம் அடைந்த எடப்பபாடி பழனிசாமி தீர்ப்பு வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அதிமுக தலைமை அலுவலகம் வந்து பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் அதிமுக 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இருந்த பொதுச்செயலாளர்கள் யார் என்று பார்க்கலாம்..
1974 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டதும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார், இதனையடுத்து 1978 - நாவலர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராக தேர்வானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1980 ஆம் ஆண்டு ப.உ.சண்முகம் பொதுச்செயலாளர் ஆனார். 1984 ஆம் ஆண்டு எஸ்.ராகாவனந்தம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
30 ஆண்டுகாலமாக பொதுச்செயலாளர்
1986 ஆம் ஆண்டில் மீண்டும் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளராக தேர்வானார். 1989 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் அதிமுகவில் அணிகள் பிரிந்தது. அப்போது ஜெயலலிதா- ஜானகி என தனி அணிகள் உதயமானது. இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்த போது, ஜெயலலிதா முதல் முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள் ஜெயலலிதாவே பொதுச் செயலாளராக இருந்தார்.
தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா
2016 ஜெயலலிதா மறைவிற்கு பின் டிசம்பர் 29ம் தேதி ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கட்சியின் தற்காலிக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிரிவை அடுத்து பொது செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.
பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி
அப்படி உருவாக்கப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி கே.பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வானர். இதனையடுத்து 2022 ஆம் ஆண்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது மீண்டும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மார்ச் 28ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி.! பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்