பொதுச்செயலாளராக பதவியேற்ற கையோடு நிர்வாகிகளுக்கு முதல் உத்தரவு பிறப்பித்த எடப்பாடி..! என்ன தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Mar 28, 2023, 12:03 PM IST
Highlights

அதிமுகவில்  உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொதுச்செயலாளரானார் இபிஎஸ்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை மோதல் முடிவை எட்டியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்றும்,  தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என அறிவித்தது. இதனையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்

இதனால் உற்சாகம் அடைந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும் அதிமுக நிர்வாகிகளுக்கு முதல் உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி,

கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும். கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!