
சென்னை ஆர் ஏ புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட பகுதியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி நேரில் பார்வையிட்டார். அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளையும் குறைகளையும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வீடு கட்டுவதை எதிர்த்து தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட முதியவர் கண்ணையன் இல்லத்திற்கு சென்ற கே.எஸ் அழகிரி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பகுதியே போர் களம் போல் உள்ளது.இந்த பகுதியில் 100 அடிக்கும் மேல் சாலை உள்ளது, அதற்கு பிறகு தான் வீடுகள் காட்டப்பட்டுள்ளது என கூறினார். ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், மின் இணைப்பு எவ்வாறு வழங்கப்பட்டது, மாநகராட்சி எவ்வாறு குடிநீர் இணைப்பு வழங்கியது என கேள்வி எழுப்பினார். திடீரென வீடுகள் இடித்தால், அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என கேள்வி எழுப்பிய அழகிரி ஏழை மக்கள் இரத்தம் சிந்தி கட்டப்பட்ட வீடுகள் சட்டத்தின் பெயரால், இடிகப்பட்டால் அதில் என்ன நியாயம் உள்ளது, மனிதாபிமானம் உள்ளது என ஆதங்கம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தமக்கு மிகவும் வருத்தமளிப்பதாக கூறினார். முதலமைச்சரிடம் இந்த பிரச்னையைச் கொண்டு செல்வோம் எனவும், தங்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் இது குறித்து சட்ட மன்றத்தில் பேசுவார்கள் என தெரிவித்தார். இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் அவர் கூறினார்.