
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன்னை அவையில் புகழ வேண்டாம் என பலமுறை கூறியும் வேண்டுமென்றே அவர் கூச்சப்படும் அளவிற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை புகழ்கிறார்கள் என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி விமர்சித்துள்ளார். ஆனால் தன்னை எதற்காக இப்படி புகழ்கிறார்கள் என்று ஸ்டாலினுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அதிமுகவின் ஆதரவாளராகவும் ஜெயலலிதாவின் பற்றாளராகவும் தன்னை பலமுறை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி. சமீபத்தில் சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததை கண்டித்து உரையாற்றினார் இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக கூட்டணி கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போல திமுக அமைச்சர்களை கேள்வி கேட்பது, சபாநாயகரிடம் சண்டை போடுவது என நேருக்கு மாறான நடவடிக்கையில் ஈடுபடுவது விஜயதாரணி என் வாடிக்கையாக உள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தனது சட்ட மன்ற செயல்பாடுகள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அது வைக்கப்பட்டுள்ள பல்வேறு கேள்விகளுக்கு அவர் சூடாகவும் சுவையாகவும் பதில் அளித்துள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத்திற்கு தாமதமாக வருவதாக சபாநாயகர் உங்கள் மீது புகார் கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பட்டியலில் வருவதே இல்லை, அவைகள் விவாதத்திற்கு வருவதுமில்லை, அப்படி இருக்கும்போது நாம் அவைக்கு நேரத்துக்குச் என்றால் என்ன ஆகிவிடப் போகிறது. அமைச்சர்களின் பதிலை அடுத்த துணைக் கேள்விகள் கேட்க வேண்டி இருக்கும், அதற்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. தங்கள் பிரச்சினைகளை அவையில் பேசுவதற்காகவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும், ஆனால் எனக்கு வழங்கப்படுவதில்லை. என்னை அலட்சியப்படுத்தும் விதமாக சபாநாயகர் பேசினாலும் அதன் மூலம் நான் மக்களுக்காக அதிக கேள்விகளை கேட்கிறேன் என்பதில் வெளியில் தெரிந்துவிட்டது அதுவே எனக்கு போதும் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சரே கூச்சப்படும் அளவிற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவருக்கு ஜால்ரா அடிக்கின்றனர். எதற்காக தன்னை இப்படி புகழ்கிறார்கள் என்பதெல்லாம் முதல்வருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, இந்த ஜால்ராக்கள் வேண்டாம் என முதல்வர் பலமுறை கூறிவிட்டார், ஆனாலும் அவரை கஷ்டப்படுத்துவதற்காக இப்படி தொடர்ந்து செயல்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன், ஆனால் இந்த ஜால்ராக்களை அவர் விரும்புவது இல்லை, அது இவர்களுக்கும் புரிவதில்லை, அதிமுகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதாக அவர்கள் உங்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், தாலிக்கு தங்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பது சிறந்த திட்டம். அது மகளிர்கான திட்டம், எனவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும் என நான் பேசினேன். அதற்காக அவர்கள் எனக்கு அப்படி வாழ்த்து தெரிவித்தனர் என கூறியுள்ளார்.
அதேபோல் தஞ்சாவூர் தேர் திருவிழா அதனால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மகாமகத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா நீராடியதை மேற்கோள்காட்டி, அநாகரிகமான கருத்தை பதிவு செய்தார். அதை நான் உடனே கண்டித்ததுடன், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினேன். சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தேன், செல்வப்பெருந்தகை இடமும் நான் அதை வலியுறுத்தினேன். ஆனால் அவள் அதை கண்டு கொள்ளவே இல்லை, செல்வப்பெருந்தகை என்னிடம் கோபமாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.