சீண்டிய கே.பி.முனுசாமி..! கொதித்த எல்.கே.சுதீஷ்..! கூட்டணி முறிவை முன்னதாக சொன்ன ஏசியாநெட்..!

By Selva KathirFirst Published Mar 10, 2021, 9:26 AM IST
Highlights

தொகுதிகள் குறைவு என்பதை விட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறிய சில வார்த்தைகள் தான் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.

தொகுதிகள் குறைவு என்பதை விட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறிய சில வார்த்தைகள் தான் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.

சுமார் 23 தொகுதிகள் வரை தேமுதிக இறங்கி வந்தது. ஆனால் 13 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவதற்கு எதுவும் இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அத்தோடு தேமுதிக சில தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளது. அதற்கு பதிலாக அதிமுக அளித்த தொகுதிகளில் மூன்று, நான்கு தொகுதிகள் மட்டுமே தேமுதிக செல்வாக்காக உள்ள தொகுதி. மற்ற தொகுதிகள் அனைத்துமே திமுக பலம் வாய்ந்த தொகுதிகள். அதோடு அங்கு இந்த முறை கட்டாயமாக திமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவது உறுதி என்பதையும் தேமுதிக அறிந்தே வைத்திருந்தது.

இது தொடர்பாகவே கடந்த ஒரு வார காலமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தையின் போது தேமுதிக, 23 தொகுதிகள் என்பதில் இருந்து குறைந்து வரவே இல்லை. இதற்கு காரணம் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவிற்கு நிகராக தங்களுக்கும் தொகுதிகள் வேண்டும் என்பதாலேயே தேமுதிக 23 தொகுதிகளில் இருந்து இறங்கி வரவே இல்லை. ஆனால் அதிமுகவோ சுமார் 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. தேமுதிகவிற்கு 23 தொகுதிகளை கொடுத்த பிறகு ஜி.கே.வாசன் கட்சி உள்ளது. மேலும் சிறுசிறு கட்சிகள் உள்ளன.

எனவே தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் என்பதை தாண்டி ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டது. கடைசியாக எல்.கே.சுதீஷ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் உடன் இருந்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது தான் தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. அப்போது தேமுதிகவிற்கு 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே வாக்கு சதவீதம் உள்ளதாகவும் அதனால் 13 தொகுதிகள் என்பதே அதிகம் தான் என்று முனுசாமி கூறியுள்ளார்.

இந்த வார்த்தை சுதீஷை கொதிக்க வைத்துள்ளது. தங்கள் கட்சியில் தொண்டர்களே 50 லட்சம் பேர் இருப்பதாக சுதீஷ் கூற, அதெல்லாம் பழைய கதை என்று மறுபடியும் கே.பி.முனுசாமி சீண்டியுள்ளார். இந்த நிலையில் அப்படி என்றால் கடலூரைத் தாண்டி பாமக என்கிற கட்சியே யாருக்கும் தெரியாத நிலையில் அவர்களுக்கு எதுக்கு 23 தொகுதிகள் என்று சுதீஷ் சீற, பதிலுக்கு வட மாவட்டங்களில அவர்களுக்கு ஒரு தொகுதியில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் உள்ளதாகவும் சில தொகுதிகளில் பாமக தனித்து நின்றே 1 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளதை முனுசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கூட்டணி கட்சிகளுக்கு தற்போதைய பலத்தின் அடிப்படையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அந்த வகையில் தேமுதிகவிற்கு பலத்திற்கு ஏற்ப 13 தொகுதிகள் என்று தீர்மானித்துள்ளதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்தே எல்.கே.சுதீஷ் கூட்டணியில் இருந்து விலகும் முடிவிற்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள். அத்தோடு கூட்ணியில் இருந்து விலகிய பிறகும், கே.பி.முனுசாமியை ஒரு பிடி பிடித்துள்ளார் சுதீஷ். பாமகவிற்கு ஆதரவாக பேசினார் என்கிற ஒரே காரணத்திற்காக முனுசாமியை பாமக கொள்கைப் பரப்புச் செயலாளர் என்றும் பாமகவின் ஸ்லீப்பர் செல் என்றும் விமர்சித்துள்ளார் சுதீஷ்.

தொகுதி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சரி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கிடைக்கும் என தேமுதிக கருதிய நிலையில் பாமகவிற்கே தொகுதி ஒதுக்கீட்டிலும் அதிமுக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதனால் தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று  ஏசியாநெட் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!