
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வைத்து ஆட்சியை தவறாக பேசக்கூடாது. தி.மு.க. ஆட்சியில் இதைவிட மிக மிக அதிகமாக சம்பவங்கள் நடந்துள்ளன.’ என்று சட்டமன்றத்தில் நாக் அவுட் கொடுத்த தமிழக அரசு இப்போது ஒரு புள்ளிவிபரத்தை பார்த்து நாக்கு வறண்டு கிடக்கிறது.
சட்டமன்றத்தில் தி.மு.க. ’சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.’ எனும் பிரச்சனையை கிளப்பும் போதெல்லாம் தமிழக அரசு மேற்கண்ட வார்த்தைகளை சொல்லித்தான் பேச்சை அடக்கும்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டு காலத்தில் 21 கொலைகள் நடந்துள்ளன எனும் புள்ளி விபரமானது எதிர்கட்சிகளை கடுப்பில் புல்லரிக்க வைத்துள்ளது. கடைசியாக நடந்திருக்கும் சேட்டு கொலையோடு சேர்த்துதான் இந்த கணக்கு.
ஓசூர் சமத்துவபுரத்தில் வசித்த சேட்டு என்கிற பிரேம் நவாஸ் ஒரு ரவுடி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளனவாம். குண்டர் சட்டத்தில் உள்ளே போய்வந்த கை.
பல நாட்களாக இவரை ‘தூக்க’ கண்காணித்துவ் அந்த எதிரி டீம் ஒன்று, கடந்த சனிக்கிழமையன்று காலையில் இவரை வீட்டுக்குள் வந்து அட்டாக் செய்து காரில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் இறங்கிய நிலையில், சூளரிகி அருகே நல்லகான கொத்தப்பள்ளி எனுமிடத்தில் தலை துண்டிக்கப்பட்டு ஒரு பிணம் கிடந்ததாம். தீர விசாரித்ததில் அது சேட்டுவின் உடல் என்பது கன்ஃபார்ம் ஆகியது.
சேட்டு கொலையை தொடர்ந்து வெளியாகியிருக்கும் புள்ளிவிபரம்தான் கிருஷ்ணகிரி மாவட்ட எதிர்கட்சிகளை எக்கச்சக்கமாக கிளப்பிவிட்டிருக்கிறது. காரணம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மட்டும் கடந்த ஜனவரியில் துவங்கி இந்த ஜனவரிக்குள்! அதாவது பதின்மூன்று மாதங்களில் இருபத்தியோறு கொலைகள் நடந்திருக்கின்றனவாம்.
தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு ஓசூரில் கொலைகள் அதிகளவில் நடந்து வருவது இந்த மாவட்டத்தில்தான் என்கிறார்கள். இந்த விவகாரம் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைமையின் கவனத்துக்கு முழு விபரங்களுடன் போயிருக்கின்றன. சட்டமன்றத்தில் இது பெரிதாய் வெடிக்கும் என்று தெரிகிறது.