நல்லகண்ணுவுக்கு வீடு உண்டா ? இல்லையா ? ஒற்றை வரியில் பதில் சொன்ன ஓபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Jul 18, 2019, 5:27 PM IST
Highlights

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு  சென்னையில் அரசு வீடு வழங்க தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார்.
 

தமிழக சட்டசபையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன்அன்சாரி இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்  ஒன்றை கொண்டு வந்து பேசினார். 

அப்போது , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் நல்லகண்ணு  குடியிருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டில் இருந்து  அவரை காலி செய்ய உத்தரவிட்டதாகவும் அதனால் அவர் காலி செய்ததாகவும் செய்தி வெளியானது. அவருக்கு மீண்டும் வீடு வழங்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், நல்லகண்ணு குடியிருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. அது மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டார்கள். என்றாலும் பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு அரசு வேறு வீடுகள் வழங்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த குடியிருப்பில் மறைந்த அமைச்சர் கக்கன் மனைவி, அதைத் தொடர்ந்து அவரது மகன்கள் குடியிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இங்கு குடியிருந்த நல்லகண்ணு தாமாகவே முன்வந்து அவரே வீட்டை காலி செய்வதாக தெரிவித்துள்ளார். 

அவருடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன். உங்களுக்கு வாடகை இல்லாத அரசு வீடு தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் வேறு வீடு பார்த்து விட்டேன் என்று சொன்னார். ஆனாலும் அவருக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் அரசு குடியிருப்பில் வாடகை இல்லாத வீடு வழங்க அரசு தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

click me!