அரசு வழக்கறிஞர்களை திணற விட்ட இந்து ராம்! மொத்த வழக்கையும் தவிடு பொடியாக்கிய தரமான சம்பவம்...

By sathish kFirst Published Oct 9, 2018, 6:28 PM IST
Highlights

நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்படுவதற்கு மூத்த பத்திரிகையாளரான இந்து என்.ராம், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடுத்துக்கூறியது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்து என்.ராம், நீதிமன்றத்தில் கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நக்கீரன் கோபல் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரை, எந்த ஆவணங்களும் இன்றி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் மீது தேச துரோக வழக்கும் பாய்ந்தது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கோபிநாத் விசாரித்தார். தாம் பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்த வகையிலும்  மிரட்டவில்லை என்று நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நக்கீரன் கோபால் மீது ஐ.பி.சி. 124-வது பிரிவின்கீழ் வழக்குப்போட முகாந்திரமில்லை. ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது நக்கீரன் கோபால் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஐபிசி 124 பிரிவின்கீழ் கைது செய்யது செல்லாது என்று நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில் இந்த என்.ராம் சில கருத்துக்களை கூற விரும்புவதாக கூறினார். ஊடக பிரதிநிதியாக இந்து என்.ராமை வாதிட நீதிபதி கோபிநாத் அனுமதித்தார். அப்போது அவர் 3 முக்கிய காரணங்களை எடுத்துக் கூறினார்.  அதில், நக்கீரன் இதழில் வெளியான சர்ச்சைக்குரியதாக கூறப்படும் கட்டுரைக்கும், தேசதுரோக வழக்குக்கான அரசியல் சட்டப் பிரிவு 124-க்கும் சம்பந்தமே இல்லை என்றார்.

இந்தியாவிலேயே இந்தப் பிரிவின்கீழ் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும். ஆனால் இந்தப் பிரிவை பிரயோகிப்பதற்கான எந்த முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை.

 இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால் அது நாட்டுக்கே தவறான முன்னுதாரணமாகி விடும். அதற்கு சென்னை நீதிமன்றம் காரணமாக அமைந்து விடக் கூடாது. பத்திரிகையில் வரும் கட்டுரைகளுக்கு 19 (1) ஏ சட்டப் பிரிவு பாதுகாப்பு தருகிறது. பத்திரிகையில் வரும் படங்களுக்காகவும் நடவடிக்கை எடுக்க சட்டப்படி முடியாது. ஆளுநர் பதவியை தேவையின்றி இதில் இழுத்துள்ளதாக இந்து என்.ராம் கூறினார். 

அவரது வாதத்தை குறித்து வைத்துக் கொண்ட நீதிபதி கோபிநாத், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சரியான பதிலை தர முடியாமல் திணறினார். இந்த நிலையில் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கினார். நக்கீரன் கோபாலுக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிமன்றத்தில், இந்து என்.ராம் எடுத்துக் கூறியதும் முக்கிய காரணமாகும்.

click me!