இவ்வளவு சொல்லியும் இந்தி திணிப்பு.? மாணவர்கள் மன நிலை அறிய பகிரத முயற்சி.? 10-ம் வகுப்பு பாடத்தில் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2020, 2:20 PM IST
Highlights

சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் 10-ம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தி திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில் குறுவினா ஒன்றில், "இந்தி கற்க விரும்பும் காரணம்" என்று குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை பட்டியலிட்டு, சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் 10-ம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தி திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் , 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில், குறுவினா ஒன்றில் "தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3- வது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக" என்று கேள்வி மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும், 3-வது மொழி எது என்பது மாணவர்களின் விருப்பம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 

பாடப்புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், இந்தி திணிப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு தனியார் பதிப்பகங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில் ( Notes ) யாரேனும் இந்தி மொழி தொடர்பாக விடைகளை எழுதியிருக்கலாம் என்றும், அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

click me!