
பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் பெரும் சர்ச்சை உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பி.யு.சி வகுப்பில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்தால் காவி துண்டு அணிவோம் என்றும் இந்து மாணவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதே சம்பவம் நடந்தேறியது. இதனால் கர்நாடக கல்லூரிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கர்நாடகாவில் 11-12ஆம் வகுப்புகளில் படிக்கும் Pre-University கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஆப்சென்ட் போடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் குண்டபுராவில் கல்லூரிக்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் இஸ்லாமிய மாணவிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கல்லூரிகளின் உத்தரவுகளை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களில் இன்னொரு பிரிவினர், கல்லூரிகளுக்கு நீலத் துண்டை அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணிவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், உடுப்பி மாவட்டத்தின் மஹாத்மா காந்தி கல்லூரியில், ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். அதே வேளையில், ஹிஜாப் அணிவது அனைவரும் சமமாக சீருடை அணியவேண்டும் என்பதற்கு எதிராக உள்ளதாகவும், அவர்கள் மத நம்பிக்கை அது என்றால், எங்கள் மத நம்பிக்கை காவித்துண்டு அணிவது என்றும் கோஷமிட்டு, காவித்துண்டுடன் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் தொடங்கினர். ஒரே கல்லூரி வளாகத்தில், ஒரே நேரத்தில் ஹிஜாப் மற்றும் காவித்துண்டுடன் இரு பிரிவு மாணவர்கள் போராடியதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பி, உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்றும் இதே பிரச்சனையில் இரண்டு கல்லூரிகள் மூடப்பட்டன. கர்நாடக கல்லூரிகளில் இந்த விவகாரம் காட்டுத்தீபோல பரவத் தொடங்கியுள்ளது.