நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடே நடக்கவில்லை !! லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்!!

By Selvanayagam PFirst Published Oct 9, 2018, 7:58 PM IST
Highlights

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்கு டெண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கும், அவருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கும் வழங்கியதாக திமுக குற்றஞ்சாட்டியது. இவ்வாறு டெண்டர் வழங்கியதில் அரசுக்கு நாலாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்ட விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வழங்கினர்.

அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையால் இந்த வழக்கில் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை என்பதால் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்தரமும் இல்லை என்றும், முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

click me!