உறுப்பினராக இல்லாதவர் கட்சி சின்னத்தில் போட்டியிடுவது மோசடிதானே... சென்னை உயர் நீதிமன்றம் சுளீர் கேள்வி... மதிமுக, விசிக உள்ளிட்ட எம்.பி.களுக்கு சிக்கல்!

By Asianet TamilFirst Published Sep 17, 2019, 9:43 PM IST
Highlights

விழுப்புரம் தொகுதியில் விசிகவின் ரவிக்குமார்,  நாமக்கல் தொகுதியில் கொமதேகவின் சின்னராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே-வின் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் இந்த 4 பேரும் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகச் செயல்பட்டுவருகிறார்கள்.
 

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற மாற்று கட்சியைச் சேர்ந்த 4  நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றி செல்லாது என தொடரப்பட்ட வழக்கில், “ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர், அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது மோசடி ஆகாதா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  நிரந்தர சின்னம் இல்லாத கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக  தலைமை வற்புறுத்தியது. அதை திமுக கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டன. இதன்படி விழுப்புரம் தொகுதியில் விசிகவின் ரவிக்குமார்,  நாமக்கல் தொகுதியில் கொமதேகவின் சின்னராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே-வின் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் இந்த 4 பேரும் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகச் செயல்பட்டுவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த 4 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தேர்தல் விதிப்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ளவர், அக்கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம். எனவே இந்த 4 பேர் வெற்றி பெற்றதும் செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை’ என ரவி தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கை விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு  “கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர், அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது மோசடி ஆகாதா?.தேர்தலில் வெற்றி, தோல்வியைவிட நேர்மையாகப் போட்டியிடுவதுதான் முக்கியம்” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், “ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருக்கிறது. என்றாலும் தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டால், அதை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள்  நவ. 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். 

click me!