
தமிழகத்தில் தற்போதைய பரபரப்பு, அரசின் சார்பில் கொண்டாடப் படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் தான். மாவட்டம் தோறும் தங்கள் செல்வாக்கைக் காட்டும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். அதற்காக பிரமாண்ட வரவேற்பு வளைவுகள், மேடைகள், பேனர்கள் என வைத்து ஆளும் கட்சி என்ற விதத்தில் அதற்கான படாடோபங்களையும் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், கோவையில் இந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகு என்ற இளைஞர் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப் பட்ட வரவேற்பு அலங்கார வளைவு மோதி உயிரிழந்தார். இப்படி விபத்து ஏற்படும் படியாக, ஓர் உயிர் போவதற்கு அரசே காரணமாக இருந்தால், அது மிகப் பெரிய குற்றம் என்று பரவலாக கருத்துகள் கூறப்பட்டன.
இந்நிலையில், இளைஞர் ரகு பேனரில் மோதி உயிரிழந்தது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ., உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரகு மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்ற போதிலும், மரண விசாரணைக்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை என்று கூறி, கோவையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்காக விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட்டது.
மேலும், சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதுடன், சாலையோரங்களில் இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதி பெற்றிருந்தாலும், விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதுடன், அனுமதி பெற்று இருந்தாலும் விதிகள் மீறப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பேனர்களையும் அகற்றியாக வேண்டும். மேலும், அடுத்து வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களின் போது, விதிகளை மீறி பேனர்கள் வைப்பதன் மீது கண்காணிப்பு அதிகமாகும்.