
திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைத்த பேனர்கள் மற்றும் கட் அவுட்களையெல்லாம் நாளையே அகற்றிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை இன்று காலை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் திருச்சியில் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக மாலை 4 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, பதிலளித்த தமிழக அரசு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக 220 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதைக்கேட்ட நீதிபதிகள், அளவுக்கு அதிகமான பேனர்கள் அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளன என்று கூறுவதில் இருந்தே முறைகேடாக விதிகளை மீறி அனுமதி பெறப்பட்டிருப்பது உறுதியாகிறது என தெரிவித்தனர்.
2 நாட்களில் பேனர்கள் அகற்றப்பட்டுவிடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து பேனர்களும் நாளையே அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.