
வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எனவே மழை குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்தில் நேற்றுடன் நிறைவடைந்தது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31 செ.மீ அதிகமாக பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால் தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ‘விழா கொண்டாட்டத்தில்’ இருக்கும் ‘குதிரை பேர’ அரசு எடுப்பதாக தெரியவில்லை எனவும் மழை காலத்தில் பொது மக்களுக்கு உதவ தயாராகுங்கள் எனவும் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், மழை குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.