இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான் நடந்திட வேண்டும். உ.பிக்களுக்கு உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 10:53 AM IST
Highlights

விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இவைகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் நாம் கையெழுத்துப் போடும் திட்டங்கள் - குக்கிராமங்கள் வரை போக வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் வசம் இருக்க வேண்டும்

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டும், அதற்குத் தேவையான அடித்தளத்தை கழகத் தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.  சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள். அதுபோது, திரு. முரசொலி செல்வம் அவர்கள் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வில் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;- கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கிப் பேசும் போது, 'இன்னும் எட்டே மாதத்தில் ஆட்சி மாறப் போகிறது' என்று நான் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்டது; கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது; ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டது. அந்த மகத்தான மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் முப்பெரும் விழா இது என்பதால், கழகத்தின் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு, எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்களது உழைப்பால், வியர்வையால், ரத்தத்தால் கிடைத்த வெற்றி இது. 

இந்த நிகழ்வில் ஐந்து பெருமக்கள் விருதுகளைப் பெற்றுள்ளார்கள்.மிசா. பி. மதிவாணன் அவர்கள்  பெரியார் விருதையும்; தேனி எல். மூக்கையா அவர்கள் அண்ணா விருதையும்; கும்மிடிப்பூண்டி கி. வேணு அவர்கள் கலைஞர் விருதையும்; வாசுகி ரமணன் அவர்கள் பாவேந்தர் விருதையும்; பா.மு. முபாரக் அவர்கள் பேராசிரியர் விருதையும் பெற்றுள்ளார்கள்.

விருது பெற்ற அனைவருக்கும் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதனை அறிவித்தபோது பேரவை அதிரக் கிடைத்த வரவேற்பு என்பது நூற்றாண்டு எழுச்சியை உணர்த்துவதாக அமைந்திருந்தது. 

'உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறோம்! எங்களுக்கு வாக்களியுங்கள்!" என்று நாட்டு மக்களிடம் நாம் வாக்குகளைக் கேட்டோம். இந்த நான்கு மாதகாலத்தில் கழக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் உங்களுக்குத் தெரியும். விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இவைகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் நாம் கையெழுத்துப் போடும் திட்டங்கள் - குக்கிராமங்கள் வரை போக வேண்டுமானால் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம் வசம் இருக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏங்கும்படியாகும் நம் பணி இருந்திட வேண்டும். 

இனி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் நடந்திட வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளத்தை கழகத் தொண்டர்கள் உருவாக்கியாக வேண்டும். “பெரியாரின் பிள்ளைகள் நாம் - பேரறிஞரின் தம்பிகள் நாம் - முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாம்” என்பதைக் கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ்நாட்டை உருவாக்க இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!