
சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா பெங்களூர் அருகே இருக்கும் ரிசார்ட்டில் தங்கியுள்ள நிலையில் முதல் வேலையாக மூன்று அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் நான்கு வருடங்களாக அரசியல் ரீதியாக எந்த செயலிலும் சசிகலா ஈடுபடவில்லை. சிறையில் இருந்த போது தினகரனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அரசியல் செயல்பாடுகளை அவரையே பார்த்துக் கொள்ளச் செய்துவிட்டார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மருத்துவமனையில் இருந்த போதும் சசிகலா அமைதி காத்தார். தன்னால் அமைச்சரானவர்கள், எம்எல்ஏக்கள் ஆனவர்கள், கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு வந்தவர்கள் என யாரும் தன்னைசந்திக்க மருத்துவமனைக்கு வராதது சசிகலாவை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அத்தோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதும் அவரை வரவேற்க எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. அமமுக நிர்வாகிகளில் கூட கணிசமான நபர்கள் மட்டுமே சசிகலாவை மருத்துவமனை வாயிலில் வரவேற்றனர். இதனை தொடர்ந்து பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு சசிகலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சுமார் 5 நாட்கள் வரை சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுநாள் வரை சிறை, மருத்துவமனையில் இருந்த சசிகலா நான்கு வருடங்களுக்கு பிறகு சுதந்திர பறவையாகியுள்ளார்.
ரிசார்ட்டுக்கு வந்த பிறகு முதல் முறையாக தான் அதிகாரத்தில் இருந்த போது அரசியல் செயல்பாடுகளை கவனித்துக் கொண்ட தனது உறவினர் வெங்கடேசை அழைத்து தான் சசிகலா பேசியதாக கூறுகிறார்கள். அவரோடு மேலும் சிலரும் சசிகலாவை சந்தித்துள்ளனர். அப்போது அதிமுகவின் தற்போதைய நிலவரம் தொடர்பாக சசிகலா சீரியசாக பேசியுள்ளார். மேலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருக்கும் டெல்லியில் உள்ள செல்வாக்கு, அவர்களை இயக்குவது யார் என்பது பற்றியும் சீரியசாக டிஸ்கசன் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் அமைச்சர்களை பற்றி பேச்சு திரும்பியுள்ளது.
அப்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றோர் வெளிப்படையாகவே சசிகலாவிற்கு எதிராக செயல்பட்டது, ஜெயக்குமார் சசிகலாவை வெளிப்படையாக விமர்சித்தது தொடர்பாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட சசிகலா, குறிப்பாக மூன்று அமைச்சர்களின் பெயர்களை சொல்லி அவர்களை பற்றி விசாரித்துள்ளார். அவர்கள் மூன்று பேரும் எடப்பாடியுடன் நெருக்கம் காட்டுபவர்கள் இல்லை, ஆனால் எடப்பாடிக்கே விசுவாசத்தை காட்டுவதாகவும் சசிகலாவிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.
அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மூன்று பேருக்கும் சசிகலாவே வரிசையாக போன் போட்டுள்ளார். மூன்று பேரிடமும் சரியாக ஒரு நிமிடம் வரை மட்டுமே சசிகலா பேசியுள்ளார். போனை மறுமுனையில் குறிப்பிட்ட அந்த அமைச்சர் எடுத்ததும், ஹலோ நான் சசிகலா பேசுகிறேன் என்கிற குரல் கேட்டுள்ளது. இதனால் அந்த அமைச்சர்கள் சில நொடிகள் ஸ்தம்பித்துள்ளனர். பிறகு எப்படி இருக்கீங்க? எப்படி இருக்க? என வழக்கமாக அவர்களிடம் சசிகலா பேசும் பாணியிலேயே பேசியுள்ளார். சும்மா, நலம் விசாரிக்கத்தான் போன் போட்டேன் என்று சசிகலா கூற, ரொம்ப சந்தோசம்மா என்று மறுமுனையில் அமைச்சர்கள் பேசியதாக சொல்கிறார்கள்.
குறிப்பாக அந்த மூன்று அமைச்சர்களுக்கு சசிகலா போன் போட காரணம், மூன்று பேருமே முதல் முறை அமைச்சர்கள் என்கிறார்கள். அத்தோடு அந்த முன்று பேரையும் சசிகலா தான் அரசியலில் வளர்த்துவிட்டுள்ளார். இதனை நினைவுபடுத்தும்விதமாகவே சசிகலா அவர்களிடம் முதலில் பேசியதாகவும் கூறுகிறார்கள். அத்தோடு தான் சிறை தண்டனை முடிந்து ரிலீஸ் ஆகி ரிசார்ட்டுக்கு வந்த பிறகும் அதிமுக பிரமுகர்கள் ஒருவர் கூட வராதது சசிகலாவிற்கு ஏமாற்றத்தை அதிகரித்த நிலையில் இனி முக்கிய நபர்களை தானே பேசி வரவழைக்க அவர் போடும் திட்டத்தின் முதற்கட்டமாக இது இருக்கலாம் என்கிறார்கள்.