இந்த பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படுமா? வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஒதுக்கப்படுமா?
மார்ச் 8வரை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 38 மசோதாக்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே புதிய வேளாண் சட்டம், கொரோனா எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டம், கிழக்கு லடாக் எல்லைபிரச்சனை என கூட்டத்தொடரை ஸ்தம்பிக்க வைக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசு புதிதாக 38 மசோதாக்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பது நிச்சயம் அவையில் அனல் பறக்க வைக்கபோகிறது என்பதை உறுதி செய்துள்ளது.
2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
undefined
கடந்த 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்கிறார். எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவால் மிகுந்த தாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இது அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதே அதற்கு காரணம்.
கொரோனா எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது அத்தியாவசிய பொருட்களின் மீதான விலை உயர்வால் மக்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர், இப்படி பிரச்சனை மேல் பிரச்சனை என மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த முறை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் இதுவரை கண்டிராத அளவில் இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது .
இந்த பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படுமா? வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஒதுக்கப்படுமா? வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? வரி விகிதங்களில் மாற்றம் ஏற்படுமா? கொரோனா வைரஸ் நெருக்கடியால் நாடு பொருளாதார சரிவை சந்தித்துவரும் நிலையில் கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்படுமா எனப் பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்றும், அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமென்றும், ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்றம் மற்றும் நிலக்கரி கனிமங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் 5 நிதி மசோதா உள்ளிட்ட 38 மசோதாக்கள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டிய அணை பாதுகாப்பு, மின்சார மசோதா உள்ளிட்ட 29 மசோதாக்களும் தயாராக இருக்கின்றன, அதில் சில மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்ற காத்திருக்கின்றன என அவர் கூறியுள்ளார். குறிப்பாக இந்த கூட்டத்தொடரில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.