கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடுதான் டாப்.. புள்ளிவிவரத்துடன் மார்தட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர்

By karthikeyan VFirst Published Apr 18, 2020, 7:33 PM IST
Highlights

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு பணிகள், சிகிச்சை பணிகளில் தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் கடந்த 4-5 நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 5 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

இன்று ஒரு நாளில் அதிகபட்சமாக 5363 கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில், வெறும் 49 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் 1372ஆக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ள அதேவேளையில், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. நேற்றும் இன்றும் ஒரு இறப்பு கூட இல்லை. நேற்று 103 பேர் குணமடைந்த நிலையில், இன்று 82 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 365 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.1%ஆக உள்ளது. இது மிகக்குறைவு. ஆனால் 365 பேர் குணமடைந்திருக்கின்றனர். இதுவரை 29997 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 21 அரசு ஆய்வகங்கள் மற்றும் 10 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 31 ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோரின் விகிதத்தில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372. அவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 365. 

அதேபோல கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, தனிமைப்படுத்தி கண்காணிப்பது, பரிசோதிப்பது என தடுப்பு நடவடிக்கைகளையும் துரிதமாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டுவருகிறோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் தான் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!