ரேபிட் கிட் எத்தனை வாங்கப்பட்டது என்ன விலைக்கு வாங்கப்பட்டது..?? முதலமைச்சரை கேள்வி கேட்கும் மு.க ஸ்டாலின்..!

By Ezhilarasan BabuFirst Published Apr 18, 2020, 6:57 PM IST
Highlights

நாடே உயிர் காக்க போராடி வரும் இந்த நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன் என அரசுக்கு  ஸ்டாலின் வினா  எழுப்பியுள்ளார்

கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை கருவி தமிழகத்திற்கு எத்தனை வாங்கப்பட்டுள்ளது ,  அது என்ன விலைக்கு வாங்கப்பட்டது , உள்ளிட்ட விவரங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வேண்டும்  என திமுக தலைவரும் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் . கொரோனா வைரஸ் எந்த அளவிற்கு தமிழகத்தில் வேகமெடுத்து வருகிறதோ அந்த அளவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் இடையேயான வார்த்தைப் போர்  தீவிரமாகி உள்ளது.  அந்த அளவிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்.  ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் அத்தனை கேள்விகளுக்கும்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஜெயக்குமார் வரை நக்கலும்  நையாண்டியுமாக  பதில்  அளித்து வருகின்றனர் .  இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ,  ஸ்டாலின் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். 

 

 

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின்   ஆட்சியாளர்களை விடுவதாக  இல்லை , மீண்டும் மீண்டும் கேள்விகளை முன் வைத்து வருகிறார்.  இந்நிலையில்  தமிழக முதலமைச்சருக்கு நீண்ட நெடிய ஒரு கேள்வியை மீண்டும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.    இந்தியாவில் ஊடுருவியுள்ள கொரோனா வைரஸ்  தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது,  இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது .  இதனால் இந்த வைரஸ் சமூகப் பரவலாக மாறுவது தடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையும் பிரதமரும்  தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் தமிழக அரசும் நம் மாநிலத்தில் இந்த வைரசை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இந்த வைரஸ் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை  அறிந்து கொள்ளவும் ,  சமூகத்தில் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதிலும்  தமிழக அரசு கவனமாக இருக்கிறது ,  இதனால் வெளிநாடுகளில் மக்கள் மத்தியில்  பரிசோதனைகள் நடத்தப்படுவது  போல தமிழகத்திலும் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்து இந்த வைரஸின் பாதிப்பை அளவிடவும் அதை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு ராபிட் டெஸ்ட் கருவிகளை  சீனா ,  தென் கொரியா போன்ற  நாடுகளிடமிருந்து  வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது .

 

 

 

இந்நிலையில் முதற்கட்டமாக தமிழகத்திற்கு  25 ஆயிரம் கருவிகள் வந்தடைந்துள்ளன. இந்த கருவிகளை  தமிழகம் அரசு அனைத்து பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி மாநிலத்தில் பரவலாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .  இதேபோல பல மாநிலங்கள் அயல்நாடுகளில் இருந்து டெஸ்ட் கருவிகளை இறக்குமதி செய்து ,  தங்களது மாநிலத்தில் பரிசோதனைகளை அதிகப்படுத்தி வருகின்றனர்.   தமிழகத்தைப் போலவே சத்தீஷ்கர் மாநிலம் பரிசோதனை கருவிகளை தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.  அந்த கருவிகளை கொண்டு அந்த மாநிலத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில எம்எல்ஏ டிபி  சிங் தியோ , தென் கொரியாவில் இருந்து 75 ஆயிரம் டெஸ்ட் கருவிகள் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .  ஒரு கிட்டின்  விலை ரூபாய் 337 + ஜிஎஸ்டி என்றும் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் . இவர் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார் ,  இந்த கருவிகள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்றும்,  மற்ற மாநிலங்களை விட சத்தீஷ்கர் மாநிலம்  குறைந்த விலையில் கொள்முதல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார் . 

 

 

தென் கொரியாவுடன் தொடர்ந்து பொருட்கள் கொள்முதல் செய்வோம் ,  எங்களுக்கு உதவிய தென் கொரிய தூதருக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில எம்எல்ஏவின் டுவிட்டரை மேற்கோள்காட்டியுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை கருவி தனது மாநிலத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது என்ன விலைக்கு வாங்கப்பட்டது எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார் .  அதே போல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகளை என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .  நாடே உயிர் காக்க போராடி வரும் இந்த நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன் என அரசுக்குஸ்டாலின் வினா  எழுப்பியுள்ளார் . 
 

click me!