
ஸ்பெக்டரம் வழக்கிலிருந்து விடுபட்ட சூட்டோடு டெல்லியில் வைத்து ‘தமிழகம் சென்று கட்சியின் எழுச்சிக்காக முழுநேரமும் உழைக்கப்போகிறேன்.’என்று எந்த நொடியில் சொன்னாரோ கனிமொழி, அந்த நொடியிலிருந்து உட்கட்சிக்குள் அவருக்கான முட்டுக்கட்டைகள் முழு வீச்சில் முளைக்க துவங்கிவிட்டன! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தி.மு.க. சார்பாக நடக்கும் பெரிய அரசியல் நிகழ்வுகளில் கனிமொழியை முன்னிலைப்படுத்துவது போல் அழைக்க வேண்டியதில்லை, கனிமொழி கலந்து கொள்ளும் அரசியல் நிகழ்வுகளில் பெரிய மாஸ் காட்ட வேண்டியதில்லை! என்பது போன்ற வாய்மொழி உத்தரவுகள் ஸ்பெக்டரம் விடுதலை கொண்டாட்டத்துக்கு பின் வந்து விழுந்திருக்கின்றனவாம்.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி சார்பாக கண்டன பொதுக்கூட்டங்கள் தமிழகமெங்கும் நடைபெற்றன. இதில் கடலூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கனிமொழி பிரதானமாக கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் கனிமொழியே பிரதானம் எனும் நிலையில் வந்திருந்த கூட்டமோ வெகு வெகு குறைவு. ஏதோ ஒன்றிய செயலாளர் பேசும் கூட்டம் எனும் ரேஞ்சுக்கு தலைகளின் எண்ணிக்கை இருந்ததாம்.
இதில் கடுப்பான கனி, நிகழ்ச்சி முடிந்து கிளம்பி போகும் போது “இந்த மாவட்டத்துல நம்ம கட்சிக்கு நாலு எம்.எல்.ஏ.க்கள் இருக்குறாங்க. இத்தனை பேர் இருந்தும் இவ்வளவு மோசமாதான் கூட்டத்தை கூட்ட முடியுமா? என்னை ஏன் இவ்வளவு சின்ன கூட்டத்துக்கு அழைச்சு அசிங்கப்படுத்தணும்?” என்று ஆவேசப்பட்டுவிட்டு கிளம்பினாராம்.
அப்போதைக்கு தலைகுனிந்து மெளனம் சாதித்த தி.மு.க. நிர்வாகிகள் அவர் கார் மறைந்ததும், ”கூட்டமில்லேன்னா கனிம்மா திட்டுறாங்க. கூட்டத்தை கூட்ட முடியாமலா நாம இருக்கிறோம்! அப்படி வெகுவா கூட்டத்தை கூட்டி இந்த கண்டன நிகழ்வை வெகுவா சிறப்பிக்க வெச்சிருந்தால் ’அவர்’ கிட்ட யாரு திட்டு வாங்கி கட்டுறது?” என்று புலம்பி நகர்ந்தார்களாம்.
அந்த ‘அவரை’ தாண்டி எப்படித்தான் டெல்லியில் தான் போட்ட சபதத்தின் படி கட்சியை எழுச்சியடைய செய்யப்போகிறாரோ கனி! என்பதுதான் புதிரே.