தமிழகத்தை நடுங்க வைக்கும் செல்ஃபி வீடியோ: பிரபாகரன், பினு விவகாரங்கள் சொல்லும் பகீர் பாடம்!

First Published Feb 17, 2018, 3:35 PM IST
Highlights
video by Prabhakaran and Pinnu


அறிவியல் அழிவு சக்திகளின் கைகளில் சிக்குவது மிகப்பெரிய அபாயம்! என்பார்கள். தமிழகத்தில் அரசியல் மற்றும் க்ரைம் என இரு ஜானர்களிலும் இன்று அந்த அபாயம்தான் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகப்பெரிய பயங்கரத்துக்கு அஸ்திவாரம் தோண்டும் விஷயமே! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

விஷயம் இதுதான். தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் அதிரவைத்த இரண்டு விவகாரங்களிலும் முக்கிய குற்றவாளிகள் இருவர் வாட்ஸப் வழியே தங்களின் சொந்த வீடியோக்களை வெளியிட்டு பேசியதும்! அதன் பின்னணியில் வழக்கு திசை மாறுவதும்! முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய பயங்கரங்கள்...என்கிறார்கள் விமர்சகர்கள்.

மாதவனை முடிக்க பிரபாகரன் பேசிய வீடியோ!

ஜெ., பேரவை தலைவி தீபாவின் வீட்டினுள் சமீபத்தில் ‘வருமான வரித்துறை அதிகாரி’ எனும் பெயரில் ஒரு நபர் நுழைந்தார். அப்போது வீட்டில் தீபாவின் கணவர் மாதவன் மட்டுமே இருந்தார். இந்த ரெய்டு குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உள்ளே வர, அந்த ‘அதிகாரி’ சுவர் ஏறி குதித்து தப்பினார். இது குறித்து மாதவனும் புகார் தந்தார்.

இந்நிலையில் சோதனையிட வந்த டுபாக்கூர் வருமான வரித்துறை அதிகாரியை போலீஸ் தேட துவங்கியது. இந்நிலையில் அந்த நபர் தானே பேசி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘என் பெயர் பிரபாகரன். தீபாவின் கணவர் மாதவன் சொன்னதாலேயே அப்படி அந்த வீட்டினுள் நுழைந்து அதிகாரி போல் நடித்தேன். எனக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாக சொல்லி, அதற்கு ரிகர்சலாக மாதவன் அப்படி நடிக்க வைத்தார்.’ என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாதவனை போலீஸார் தேட துவங்கினர்.

ஆனால் அதன் பிறகுதான் போலீஸின் விசாரணையில் தெரிந்தது...பிரபாகரனுக்கும், மாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது. தீபாவின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக நினை பிரபாகரன், வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறிப்பதற்காக தீபா இல்லாத நேரத்தில் உள்ளே வந்துள்ளார். ஆனால் போலீஸ் வந்ததும் எகிறி குதித்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

போலீஸ் தன்னை தேட துவங்கியதும் மொத்த பழியையும் மாதவன் மேல் தூக்கி போட்டு வழக்கின் போக்கை அவர் மேல் திசை திருப்பிவிட்டு தான் தப்பிக்க நினைத்துள்ளார். ஆனால் அது எடுபடாமல் போய்விட்டது.

பிரபாகரனின் செல்ஃபி பேச்சு வீடியோவால் போலீஸே முதலில் குழம்பி மாதவனை சந்தேகப்பட்டது. ஆனால் தீர விசாரித்ததில்தான் பிரபாகரனின் உண்மை ரூபம் தெரிந்தது. இந்த வழக்கில் போலீஸை பாராட்ட வேண்டும்.

பினுவை பிடரியை பிடித்து பேச வைத்ததா போலீஸ்?:

பிரபாகரனின் செல்ஃபி வீடியோவுக்கு பிறகு தமிழகத்தை கலக்கிய இன்னொரு வீடியோ ரெளடி பினுவுடையது. அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினாரே அதே பினு.

இவரை போலீஸ் தேடிக் கொண்டிருந்தபோது ’எனக்கு திருந்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் முன்ன மாதிரி இல்லை. எனக்கு சுகர் இருக்குது.’ என்று செல்ஃபி வீடியோவில் கெஞ்சியிருப்பார் பினு. தமிழகம் முழுவதும் வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்து பினு மீதான பயங்கர பிம்பம் மக்கள் மத்தியில் தவிடு பொடியானது. இந்த வீடியோ சக்கை போடு போடும் நேரத்தில் பினுவும் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது சில முக்கிய வழக்கறிஞர்கள் தரும் தகவல் என்னவென்றால்!...பினுவை கைது செய்த போலீஸ் தங்களின் கஸ்டடியில் வைத்து, நன்றாக ‘கவனித்து’, அதன் பிறகு அவர்களே பினுவை அப்படி அழுது பேச வைத்தார்கள் என்பதே.

அதாவது ரெளடிகள் அரெஸ்ட் மூலம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை சீர்கெட்டு கிடப்பதாக ஒரு தகவல் பரவி கிடக்கிறது. மத்திய அமைச்சரே கடுமையாக விமர்சிக்கிறார். அதிலும் பினுவை குறித்து மக்கள் மத்தியில் பயங்கர கதைகள் உலவ துவங்கின. ஒட்டு மொத்தத்தில் ‘ரெளடிகளின் ராஜியமான தமிழ்நாடு’ என்று விமர்சனம் வெடித்து, ஆட்சி அசிங்கப்பட துவங்கியது.

இதை உடைக்கவே ‘பினு ஒரு டம்மி பீசு’ என்று மக்கள் மத்தியில் பரவுவதற்காகவே போலீஸே செய்த ட்ரிக் இது! என்கிறார்கள்.
ஆக தகவல் தொழில்நுட்ப அறிவியலின் ஒரு முக்கிய வடிவமான வாட்ஸ் அப்பில் இந்த மாதிரியாக எதைப் போட்டாலும் வைரலாகும்,

அதை மக்கள் நம்புவார்கள் என்பது அரசியல், ரெளடிகள் போன்ற பல முக்கிய மையங்களின் மனதில் அழுந்த பதிந்திருக்கிறது. அதனால்தான் இப்படியான பொய்களை சம்பந்தப்பட்டவர்களை வைத்தே வீடியோவாக்கி அதை பரப்பிவிடும் யுக்தி பிரபலமாகி இருக்கிறது.இந்த யுக்திகளின் மூலம் இனி ஊழல் அரசியல்வாதிகள் தப்புவார்கள், கிரிமினல்கள் எஸ்கேப் ஆவார்கள், வழக்குகள் திசை மாறும்.

இதில் பிரபாகரன் விஷயமானது போலீஸை குழப்ப நடந்தது, பினு விவகாரமோ போலீஸே நடத்தியது! என்கிறார்கள்.
மொத்தத்தில் பிடியில்லாத கத்தியாக இருக்கும் இந்த ‘செல்ஃபி வீடியோ’ விஷயம் எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை.

click me!