ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்கள் லிஸ்டில் H.ராஜாவும் இருப்பார்... கன்ஃபார்ம் பண்ண ஜெயகுமார்!

By sathish kFirst Published Sep 25, 2018, 6:04 PM IST
Highlights

ஜாதி - மத கலவரங்களை உருவாக்க நினைப்பவர்களுக்கு இனி மாமியார் வீடு ஜெயில்தான் என்றும், ஹெச்.ராஜா மீது பல்வேறு 
வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், உள்ளே போய்விட்டு வந்தவர்கள் வரிசையில் அவரும் ஒருவராக இருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, சாந்தோமில், அமைச்சர் ஜெயக்குமார் - செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சட்டத்தின் முன்  அனைவரும் சமம். இதில் மாறுபட்ட கருத்து இல்லை. கருணாஸ், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் கருணாஸ் பேச்சு அமைந்திருந்தது. ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்தையே மதிக்காத  வகையில் எம்.எல்.ஏ. கருணாஸ் பேசியிருக்கிறார். எம்.எல்.ஏ. என்பவர் அரசமைப்பு சட்டத்தின்படி பதவியேற்றுக் கொண்டவர். 

கருணாசின் எம்.எல்.ஏ. பதவியையே ஏன் பறிக்கவில்லை என்றுகூட வல்லுநர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு வழக்கில், பால்தாக்கரே இதுபோன்று ஒரு கருத்தை கூறும்போது, உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியது. அதன் 
அடிப்படையில் பால்தாக்கரேவால், வாக்களிக்க முடியவில்லை.

அதுபோன்ற நிலை, இப்படி பேசுபவர்களுக்கெல்லாம் நடக்கும். இதுபோன்ற நிலை கொண்டு வந்தால்தான், வாயை மூடிக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் கடமையை அவர்கள் ஆற்றுவார்கள். இல்லை என்றால், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். 

சட்டம் ஒழுங்கு இல்லை என்றால், என்னை கட்டுப்படுத்துவதற்கு யாரும்  இல்லை என்ற ரீதியில் பேசுவார்கள். அப்போது நாடு நாடாக இருக்காது. ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்க நினைப்பவர்களுக்கு இன் மாமியார் வீடு ஜெயில்தான்.

அதிமுகவுக்கு என்று தனித்தன்மை உள்ளது. அதனை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம். கூஜா தூக்குவது திமுகவுக்கு வழக்கமாக இருக்கலாம். அரசுக்கும் அரசுக்குமான இணக்கம் இருந்து வருகிறது. 

கடுமையான வழக்குகள் போடப்படும் நிலையில், ஹெச்.ராஜா பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உள்ளே போய் விட்டு வந்தவர்கள் வரிசையில் ஹெச்.ராஜாவும் இருப்பார்.

டிடிவி தினகரன்தான் அடிமை. தமிழகத்தில் முழுமையான அளவுக்கு ஒரு அடிமை அரசியல் செய்பவர் என்றால் டிடிவிதான். 
அதிமுகவை பொறுத்தவரை நாங்கள் சுதந்திர அரசியல் செய்துவருகிறோம். பரந்த மனப்பான்மை கொண்ட அரசு. மரபை காப்பாற்ற  வேண்டிய அரசு. அரசியல் உள்நோக்கம் இல்லாது அரசு நிகழ்ச்சிக்கு ஸ்டாலின், டிடிவிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். வருவதும்  வராததும் அவர்களது விருப்பம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

click me!