தமிழ்நாடு வேண்டாம்... இனி நேஷ்னல் லெவல்தான்...! எகிறி குதிக்கும் டி.ராஜேந்தர்!

By vinoth kumarFirst Published Sep 25, 2018, 4:07 PM IST
Highlights

இலட்சிய திமுக சார்பாக, என்னுடைய பிறந்த நாள், அக்டோபர் 3 ஆம் தேதி அன்று முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், இனி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இலட்சிய திமுக சார்பாக, என்னுடைய பிறந்த நாள், அக்டோபர் 3 ஆம் தேதி அன்று முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், இனி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு, இயக்குநர் டி.ராஜேந்தர், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக திகழ்ந்த டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தவர். இதன் பிறகு கருணாநிதியுடனான கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து வெளியேறினார்.

 

இதனை அடுத்து தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் திமுகவில் இருந்து வைகோ வெளியேறியதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ராஜேந்தர். இதன் பிறகு, சென்னை பூங்கா நகர் தொகுதியை திமுக ஒதுக்கியது. அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வும் ஆனார். மீண்டும் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். இந்த நிலையில்தான் 2004 ஆம் ஆண்டு அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 

2013 ஆம் ஆண்டு மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். திமுகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியே இருந்தார் டி.ரஜேந்தர். இந்த நிலையில், சென்னை தியாகராக நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 88 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஸ்டாலினால் என்ன செய்ய முடிந்தது.

 

வரும் அக்டோபர் 3 ஆம் தேதி, கட்சியின்  பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி என்னுடைய 64-வது பிறந்தநாள். ஒரு காலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட என்னுடைய பிறந்தநாள், இன்றெல்லாம் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், வரும் பிறந்தநாளன்று கட்சி சார்பாக புதிய முடிவுகளை எடுக்க இருக்கிறேன். இனி, நான் தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறேன். தி.மு.க-வின் உண்மை விசுவாசியாக இருந்த என்னை குப்பையைப் போல தூக்கி எறிந்தனர். 

அதன் காரணமாகத்தான் நான் ஒரு புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க வேண்டியிருந்தது. என் மனைவி போட்டியிட்ட நாடாளுமன்ற, நான் போட்டியிட்ட சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற பெருமை உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் எல்லாம் அழைத்தும் நான் அரசியலுக்குச் செல்லவில்லை. 

ஆனால், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று, பொதுக்குழு கூட்டப்பட்டு, ஆதரவாளர்களுக்கு புதிய உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டும், புதிய கிளை உறுப்பினர்களைப் பணி அமர்த்த உள்ளேன். அதுமட்டுமில்லாமல் கோவை, ஈரோடு, அரியலூர் என தொடர்ச்சியாக மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். ''செக்கச் சிவந்த வானம்'' திரைப்படம் வெளியானதற்குப் பின்பு ரசிகர் மன்றம் புனரமைக்கப்படும். காழ்ப்புணர்ச்சி காரணமாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. சிம்புவை நடிக்கவைத்த மணிரத்தினத்தின் மனிதத்தன்மைக்கு நன்றி என்று கூறினார்.

click me!