ஊடகங்களை அநாகரிகமாக விமர்சித்த ஹெச்.ராஜா.. ஊடகங்களை கூல் படுத்தும் முயற்சியில் இறங்கிய அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Sep 28, 2021, 9:52 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊடகவியலாளர்களை மிகக் கடுமையாக கொச்சையான ஆட்சேபிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் ஹெச்.ராஜாவை ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில், “ஜனநாயகத்தினை தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது. அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது” என்று அண்ணாமலை  குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களை ஹெச்.ராஜா மிகக் கேவலமாக விமர்சித்துள்ள நிலையில், அவருக்குப் பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். ஆனால், ஹெச்.ராஜா பேசியதைக் கண்டிக்காமல், அண்ணாமலை ஊடகங்களைப் பாராட்டி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!