
விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம், வெளியீட்டுக்கு முன்னாள் சந்தித்த பிரச்னைகளை விட தற்போது அதிகமான பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிரான தவறான கருத்துக்கள் வசனங்களாக இடம்பெற்றிருப்பதால் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிரான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் அத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக வரும் வசனங்கள் பொய்யான தகவல் எனவும் கொந்தளித்தார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த எச்.ராஜா, மெர்சல் திரைப்படத்தை இண்டர்நெட்டில் பார்த்ததாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோடி கோடியாக செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை, சட்டவிரோதமாக இண்டர்நெட் மற்றும் திருட்டு விசிடிக்களில் பார்ப்பதால் பெரும் திரைத்துறையினர் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் அதனால் அதைத் தடுக்க வேண்டும் எனவும் திரைத்துறையினர் போராடி வருகின்றனர்.
திரைப்படங்களை சட்டவிரோதமாக இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்வதும் திருட்டி விசிடி போட்டு விற்பதும் குற்றம் ஆகும். இதைத்தடுக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் போராடி வருகிறார்.
இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவரான எச்.ராஜா, தான் மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்ததாக கூறியிருப்பது அதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பணம் கொடுத்து தியேட்டரில் பார்க்காமல் சட்டவிரோதமாக ஓசியில் இண்டர்நெட்டில் பார்த்துவிட்டுத்தான் இம்புட்டு பேச்சா? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ராஜாவை விமர்சித்து வருகின்றனர்.