
மெர்சல் திரைப்படத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்னும் துணை நிற்கும் எனவும் ஜனநாயகத்துக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகளின் காரணமாக இழுக்கடிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. வெளியான பின்னரும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. காரணம், அப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் வசனங்கள் உள்ளன.
இந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை பரிசாக கொடுத்துள்ளது. மேலும் மெர்சல் படத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது.
பாஜக எதிர்ப்பால் மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைகுரிய வசனம் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மெர்சல் திரைப்படத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்னும் துணை நிற்கும் எனவும் ஜனநாயகத்துக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது என்றும் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.