
குஜராத் மற்றும் இமாசலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் இன்ற வாக்கு எண்ணிக்கை தொடங்கிது. குஜராத்தில் முதல் கட்டமாக தபால் ஓட்டுகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது.
மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜனதா உள்ளது. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தொடர்ந்து 3 மாதங்கள் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் 2 கட்ட தேர்தல்களிலும் 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 71.3 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
மாநிலத்தில் ஆட்சி அமைக்க 92 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் 115 பேரும், காங்கிரசில் 61 பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.
68 உறுப்பினர்களைக் கொண்ட இமாசலபிரதேசத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடந்தது. இங்கு நடந்த தேர்தலில் மொத்தம் 75.28 சதவீத ஓட்டுகள் பதிவானது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. கடந்த தேர்தலில் காங்கிரசில் 36 பேரும், பா.ஜனதாவில் 26 பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.
குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பிறகே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டு இருந்ததால் இங்கு இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பாஜக முன்னிலை வகிப்பதாக தெரிகிறது.