மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்த்த மத்திய அரசு: ஜிஎஸ்டி நிலுவை ரூ.35,298 கோடி விடுவிப்பு ....

By Selvanayagam PFirst Published Dec 17, 2019, 10:10 PM IST
Highlights

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் ரூ.35,298 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 

ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
அதன்படி, இழப்பீட்டுத் தொகையானது 2016-17 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, வருவாயின் மேல் 14 சதவீதம் என்ற அளவில் நிா்ணயம் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருள்கள், சிகரெட்டுகள், மோட்டார் வாகனம், நிலக்கரி ஆகியவற்றின் மீது ‘செஸ்’ விதிப்பதன் மூலமாக இந்த இழப்பீட்டை வழங்குவதற்கான நிதியை மத்திய அரசு திரட்டி வருகிறது

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்ற நிலையில், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. 

இதற்கு, மாநிலங்கள் அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலிருந்து கடும் எதிா்ப்பு எழுந்தது.இந்தச் சூழ்நிலையில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவையை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத் துறை வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில், ‘ மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.35,298 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு திங்கள்கிழமை விடுவித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

38-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்காததற்கு அந்த கூட்டத்தில் கடும் எதிர்ப்பை தெரிவிக்க மாநிலங்கள் திட்டமிட்டிருந்தன. அதுபோன்ற இறுக்கமான சூழலை தவிர்க்கும்  விதமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

click me!