தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் !! பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி!!

By Selvanayagam PFirst Published Feb 17, 2019, 9:48 AM IST
Highlights

சென்னையில் உள்ள அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்களைச் சீரமைக்காமல் சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் சீர்கேடு ஏற்படுத்தியதாகக் கூறி, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது 
 

திருவான்மியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் கடந்தாண்டு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில்  ஒரு வழக்கு தொடுத்தார். அதில் பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் கட்டுமானக் கழிவுகள், மணற்குவியல்கள், குப்பைகள் இருப்பதால் மழைக்காலத்தில் நீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் அந்த கால்வாயைத் தூர் வார வேண்டும் எனவும், அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.


இது போன்று முத்துமீனா, எட்வின் வில்சன் ஆகியோரும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு மீதான விசாரணை  நேற்று  தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. அப்போது அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் வெளியேற்று நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், நல்ல சுற்றுச்சூழலைக் குடிமக்களுக்கு அளிக்கும் கடமை மாநில அரசுக்கு இருப்பதாகக் கூறினர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசு தவறி விட்டது என்பது அடையாறு, கூவம், பங்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் மூலமாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டனர். இது தொடர்பாக கால வரையறைக்கு உட்பட்ட செயல் திட்டத்தைப் பொதுப்பணித் துறை வகுக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்துமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக, வரும் ஏப்ரல் 23ஆம் தேதியன்று தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை நியமித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஆய்வறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

click me!