13 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற மிருகத்தனம்.. அதிமுக அரசின் தலைமைச் செயலாளரை விடாதீங்க.. கொதிக்கும் எஸ்டிபிஐ.

By Ezhilarasan Babu  |  First Published Oct 19, 2022, 12:14 PM IST


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு மிருகத்தனமானது என்றும் தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு மிருகத்தனமானது என்றும் தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது 

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முடமாகினர்.

Tap to resize

Latest Videos

காவல்துறையின் அநியாய துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம்  தனது முழுமையான 3000 பக்க விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடந்த மே மாதம் 18ம் தேதி வழங்கிய நிலையில் அந்த அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பொதுமக்களின் போராட்டம் தொடர்பாக எவ்வித முன்யோசனையும் இல்லாமல் தவறான முடிவுகளை மேற்கொண்டதோடு, தனது பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: எந்த இந்தியால் ஆட்சிக்கு வந்தீர்களோ அதே இந்தியால் ஆட்சி வீழப்போகிறது.. ஸ்டாலின் அரசை சபித்த அண்ணாமலை.

மேலும், காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச்சூட்டை ஆரம்பித்து விலை மதிப்பில்லா உயிர்களை சுட்டுக்கொன்றதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை கூறும் கருத்து பொய்யானது என்றும், போராட்டக்காரர்களை தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குறிவைத்து 13 உயிர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையின் நடவடிக்கை மிருகத்தனமானது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், ஆணையத்தின் விசாரணையில்,  போராட்டக்களத்தில் சிலர் ரகசியமாக நுழைந்து நாச வேலையில் ஈடுபட்டதும், அவர்கள் ஸ்டைர்லைட் நிர்வாகம், காவல்துறை பங்களிப்புடன் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது எனவும் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இதையும் படியுங்கள்: இந்தியை எதிர்க்கும் அமைச்சர்களே.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ்வழியில் படிக்கிறார்கள்.? வானிதி சீனிவாசன்

இதன்மூலம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் முழுக்க முழுக்க ஆலை நிர்வாகம் மற்றும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான உயர் அதிகாரிகளின் சதியின் பேரிலேயே நிகழ்ந்துள்ளது ஆணையத்தின் அறிக்கை மூலம் தெரிய வருகிறது. ஆகவே தமிழக அரசு ஆலை நிர்வாகம் மீதும், அப்போதைய தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்த  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விசாரணை ஆணையத்தின் பரிந்துரை மீது தமிழக அரசு விரைவாக உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு விரைவாக நீதி கிடைக்கப்பெற வேண்டும். சம்பவத்தில் குற்றம் இழைத்த அனைத்து அதிகார வர்க்கங்களும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைப்படியும், உயிரிழந்த தியாகிகளை போற்றும் வகையிலும், நாசகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வகையில் தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!