ஏம்ப்பா நாட்டுல கொலை, கொள்ளை நடந்துச்சுன்னா அதுக்கு கவர்மெண்ட் என்ன பண்ணும் !! அமைச்சரின் ஆணவப் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jul 24, 2019, 6:49 PM IST
Highlights

தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது தமிழக  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பொதுவாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடைகளில் பேசும் போதோ அல்லது நிருபர்கள் சந்திப்பின் போதே எதையாவது உளறிக் கொட்டுவார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணிக் கட்சியான, பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்திற்கு  பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அதிர வைத்தார்.

அதே போல் ஒரு மேடையில் திண்டுக்கல் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை, , சோலை முத்து என்று மாற்றிக் கூறி சர்ச்சையில் சிக்கினார். ஒரு முறை பிரதமர் மோடி என்பதற்கு பதில் பிரதமர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டார். இப்படி எதையாவது பேசி நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுவார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று நகைக்காக நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பணத்துக்காக, நகைக்காக இப்படி கொலை, கொள்ளைகள் நடக்குது. இது எல்லா இடங்களிலும்தான் நடக்குது. டெய்லி பேப்பர்ல செய்தி வருது. டிவியிலயும் செய்தி வருது. இதுக்கு நாம என்ன செய்ய முடியும்? எல்லா ஊரிலும், எல்லா நாட்களிலும் எல்லார் ஆட்சியிலும்தான் நடக்குது.

இதையெல்லாம் அவங்கவங்களே பார்த்து திருத்திக்கிட்டாதான் உண்டு. கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்? என்று ஒரே போடாக போட்டார். அமைச்சரின் பேச்சைக் கேட்டு செய்தியாளர்கள் அதிர்ந்து போயினர்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதும், அதனை  அமலாக்குவதும், ஒரு அரசின் முக்கிய கடமை என்பதைக்கூட அறியாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

click me!