
ஆயிரம் பிரச்னைகள் வெடித்தபோதெல்லாம் கலங்காத தமிழக அமைச்சரவை கலங்கி நிற்பது கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் அதிரடிக்கு மட்டும்தான். ஆய்வு, விசாரணை, அலோசனை என்று மனிதர் காட்டும் ராக்கெட் வேகம் இரு முதல்வர்களையும், ஏனைய அமைச்சர்களையும் மட்டுமில்லாது அதிகாரிகளையும் அதிர வைத்திருக்கிறது.
கவர்னர் விஷயத்தில் ஏற்கனவே இருக்கும் ஷாக் பத்தாது என்று பிரதமர் மோடியின் அலுவலகத்தில் பணியாற்றிய சோமநாதன் என்பவரை தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி துறையின் செயலராக நியமித்துள்ளது ராஜ்பவன்.
இந்த அதிர்ச்சியில் இருந்து தமிழக அமைச்சரவை மீள்வதற்குள், தலைமை செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் ராஜகோபால். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாநிலங்கள் கவுன்சிலில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜகோபாலை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த ராஜகோபால் செம்ம கண்டிப்பான அதிகாரி. இனி கவர்னரின் கவனத்துக்கு வரும், தமிழக அரசுத்துறை மூத்த அதிகாரிகள் மீதான புகார்கள் அத்தனையையும் ராஜகோபாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றே தெரிகிறது.
அந்த புகார் மீதான உண்மைத்தன்மையை விசாரிக்கும் ராஜகோபால், அது உண்மை எனில் அதன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் குறிப்பிட்டு கவர்னரின் பார்வைக்கு அனுப்புவார்! கவர்னர் க்ரீன் சிக்னல் காட்டியதும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை அம்பு பாயும்! என்கிறார்கள்.
ராஜகோபால் எந்த பிரஷருக்கும் அடங்காத நேர்மையான உயர் அதிகாரியாம். ஆக தவறு செய்யும் அதிகாரிகள் இனி தேடித்தேடி வேட்டையாடப்படுவார்கள் என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.
சரி! அரசு உயரதிகாரிகளை இப்படி டார்கெட் செய்து அடிக்கவேண்டிய அவசியமென்ன? என்று கேட்டால்...’ பதவிக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எதிலெல்லாம் ஊழல் செய்யலாம்? எப்படியெல்லாம் பணம் பண்ணலாம்? என்று கத்துக் கொடுப்பதே அதிகாரிகள்தானே!’ என்பதுதான் ராஜகோபாலின் லாஜிக்காம்.
சர்தான்!