
மழை இரவு மிரட்டுகிறது. சொட்டச் சொட்ட நனைந்தபடி வீடுகளை வந்து சேர்ந்திருக்கிறோம். ஆளுக்கு நான்கு சப்பாத்தியும், ஆவி பறக்க குருமாவுமாய் வைத்து சாப்பிட்டபடியே ‘எந்த தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்?’ என்று இந்த ஈரத்திலும் ஹாட் செய்திகளுக்காக அலைபாயும் உங்களுக்காகவே இதோ ஏஸியா நெட் தமிழ் இணைய தளத்தின் நறுக் துணுக்குகள்...
* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எங்கள் சமத்துவ மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
- (சிரிக்காமல் சொன்ன) சரத்குமார்.
* கழகத்தை காப்பாற்ற முதல்வரும், துணை முதல்வரும் தியாக உணர்வோடு இணைந்திருக்கின்றனர். அவர்களுடன் நாமும் ஒருங்கிணைவோம்.
- (விமர்சித்து தள்ளிய அதே நாக்கால் மாற்றிபேசிய) ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.
* இந்த இயக்கத்தில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது, எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.
- (பிளவை மறைக்க ஏதோ சொல்ல முயலும்) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
* தொண்ணூற்று ஒன்பது சதவீதம் தொண்டர்கள் எங்களுடனேயே உள்ளனர். கட்சியை நிச்சயம் மீட்போம்.
- (பேட்டியில் ஏதாவது நம்பிக்கையாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில்) தினகரன்.
* உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை அச்சிடக்கூடாது என்று ஐகோர்ட்டே உத்தரவிட்டும் அ.தி.மு.க. அரசு கண்டுகொள்வதில்லை.
- (அரசை பணிய வைக்க முடியாத கடுப்பில் பேசிய) ஸ்டாலின்.
* பணத்திற்காக என்ன பொய் வேண்டுமானாலும் கூறுவார் சிம்பு. அவர் திருந்தி படம் செய்வார் என்கிற நம்பிக்கை இல்லை.
(கோடிகளை இழந்த கொதிப்பில் பேசிய) மைக்கேல் ராயப்பன்.
* கமல் சாரே போயிட்டு வந்த பின் நானெல்லாம் போகமாட்டேனா? பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த கூப்பிட்டால் நிச்சயம் போவேன்.
- (வாலண்டியராக விஜய் டி.வி.யில் வாய்ப்பு கேட்கும்) சந்தானம்.
* ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தனி மேடையில்தான் நாங்கள் பிரச்சாரம் செய்வோம். தி.மு.க. வேட்பாளர் வந்தால் அவரை மட்டும் மேடை ஏற்றுவோம்.
(கீழே விழுந்து புரண்ட பின்னும், என்னது மீசையில மண்ணே ஒட்டலையேப்பா! என சீன் போடும்) ஜி.ராமகிருஷ்ணன்.
* தனக்கும் நடிகர் சோபன் பாபுவுக்கும் பெண் குழந்தை பிறந்ததாகவும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் ஜெயலலிதாவே என்னிடம் கூறினார். இதுக்கு மேலே என்னை எதுவும் கேட்காதீங்க.
- (தமிழகத்தினுள் அணுகுண்டுவுக்கு இணையான ஒரு கருத்தை வீசுகிறோம் என்று உணராமல் பேசும்) பெங்களூரு லலிதா.
* அரசியல் நாகரிகத்துடன் ஸ்டாலினுடன் சந்திப்பு நிகழ்ந்தது. சிறிது நேரம் காத்திருந்து அவரை சந்தித்ததில் தவறில்லை.
- (ஸ்டாலினுடனான பழைய மனக்கசப்புகளை எல்லாம் மறைத்து மூட்டை கட்டியபடி) வைகோ.