ஆளுநர் உரை இல்லை.. திமுகவின் கொள்கை விளக்க உரை.. ஆர் .என் ரவியை பகிரங்கமாக எதிர்த்த அர்ஜூன் சம்பத்.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2022, 11:59 AM IST
Highlights

அது முழுக்க முழுக்க திமுகவின் கொள்கை விளக்கும் உரையாகவே இருந்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் உளவுத்துறை தமிழக உளவுத்துறை மோடியின் வருகையையொட்டி, கண்காணித்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் வாசித்தது ஆளுநர் உரை அல்ல, அது திமுகவின் கொள்கை விளக்க உரை,  மக்கள் பிரச்சினைகள் அந்த உரையில் இடம்பெறவில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 250 நாட்களில் 500க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மழை வெள்ள நிவாரண பணிகள் போன்றவற்றில் அரசு செயல்படும் விதம் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. இது ஒருபுறமிருக்க எதிர்க்கட்சியான அதிமுக பாஜக  அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுகவை காட்டிலும் பாஜக தமிழக அரசை மூர்க்கமாக எதிர்த்து எழுகிறது. அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும்  உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்காகவே பாஜகவினர் திமுக அரசை வலிய எதிர்ப்பதாக கருத்து நிலவி வருகிறது இந்நிலையில் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து தமிழக ஆளுநர் முதல்வர் ஸ்டாலினையும் அவரின் செயல்பாடுகளையும்  புகழ்ந்து பாராட்டி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முன் மாதிரி மாநிலமாக செயல்படுகிறது என்றும், மழை வெள்ளம் கொரோனா பரவல் நேரங்களில் தமிழக முதல்வரும் அரசு சிறப்பாக செயல்பட்டது என்றும் ஆளுநர் தனது உரையில் கூறினார். ஏழை எளிய மாணவர்களின் உரிமையை பறிக்கும் ,சமத்துவமின்மையை ஏற்படுத்தும் நீட் தேர்வு போன்ற தேர்வுகள் தேவையற்றது என்ற தமிழக அரசின் கொள்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் அவர் வாசித்தார்.

முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து தமிழக அரசு செயல்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஆளுநர் ஆற்றிய உரையை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அண்ணாமலை அது ஒரு வெற்று உரை என்று விமர்சித்துள்ளார். மாநில அரசை புகழ்வது தான் ஆளுநர் உரையா என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், ஆளுநர் உரையை கடுமையாக விமர்சித்துள்ளார், அது தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது:- சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக  மக்கள் சந்தித்த பாதிப்புகள் ஆளுனர் உரையில் இடம்பெறவில்லை, ஆளுநர் உரையில் மக்களின் பிரச்சனைகள் பேசப்படவே இல்லை,

அது முழுக்க முழுக்க திமுகவின் கொள்கை விளக்கும் உரையாகவே இருந்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் உளவுத்துறை தமிழக உளவுத்துறை மோடியின் வருகையையொட்டி, கண்காணித்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், பஞ்சாபில் மோடியை எதிர்த்து தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது, அம்மாநிலத்தில் மோசமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. அங்கு ஆளுகிற காங்கிரஸ் திட்டமிட்டு மோடியை தடுத்துள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசாங்கத்தை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.. 
 

click me!