
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சகம், பிரதமர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சுமார் 15 நிமிடம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் முதலமைச்சர், பதவி ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து ஆளுநரிடம் ஆலோசித்தார்.
மேலும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தன்னை மிரட்டியதாகவும், தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா சிறை வைத்துள்ளதாகவும் ஆளுநரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆளுனரை சந்தித்து தன்னை முதலமைச்சர் ஆக ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏக்கள் கையொப்பமிட்ட பட்டியலை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அந்த அறிக்கையில், உரிய ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.
சட்ட மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த முடிவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே வெகுவாக கிளம்பியுள்ளது.